காலைக் கடனை முடித்து விட்டு, தன் மகனின் படுக்கையறையை கடந்து செல்லும் தந்தைக்கு நம்ப முடியாத ஆச்சரியம், தினமும் காலை தான் கண் விழித்து மணி நேரங்கள் கடந்தும் எழுந்திரிக்க மறுக்கும் மகனின் படுக்கை அறை இன்று பெட்ஷீட் மடிக்கப்பட்டு, படுத்த சுவடே தெரியாமல் மிகவும் "க்ளீனாக" இருப்பது கண்டு ஒரு நிமிடம் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்..
"அப்பாவிற்கு" என்ற தலைப்பிட்ட கடிதம் ஒன்று தலையணையின் கீழ் மடிக்கப்பட்டு இருப்பது படுக்கையறையை ஆச்சரியத்துடன் உற்று நோக்கும் அவரின் கண்களில் படுகிறது.
கைகளில் நடுக்கம் மேலிட மனக் கசப்புடன் கடிதத்தை திறந்து படிக்க ஆரம்பிக்கிறார்.
அன்புள்ள அப்பாவிற்கு,
வருத்தமான கவலையுடன் தங்களின் மகன் எழுதிக் கொள்வது, இந்தக் கடிதம் தங்களை வருத்தமுறச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் இந்த விஷயத்தை உங்களின் முன்போ அல்லது மம்மியின் முன்போ சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.
நான் "ஸ்டேசி"யை மனதார நேசிக்கிறேன்,
அவளின் அங்கமெங்கும் வண்ணக் கோலம் பூண்டிருக்கும் "டாட்ட்டூஸ்", அவளின் சரீரத்தை நசுக்கி நாயாக்கும் அவள் அணியும் இருக்கமான ஜீன்ஸ் & T சர்ட், மேலும் அவள் என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவள், இத்தனை குறைபாடுகளை வைத்துக் கொண்டு நீங்கள் எங்கள் காதலை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, நியாமற்றதும் கூட, ஆகையால்தான் நான் வீட்டை விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
நான் அவளுடன் ஓடியது அவள் மீது உள்ள வெறும் ஈர்ப்பு மட்டும்தான் காரணம் என்று தயவு செய்து எண்ணி விடாதீர்கள், அவள் இப்பொழுது மூனு மாசம் முழுகாமலிருக்கிறாள்.
குளிர்ப்பிரதேசத்தில் உள்ள அவளின் எஸ்ட்டேட்டில் தங்குவதற்கு முடிவெடுத்துள்ளோம், அங்கு எங்களின் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும்.
மேலும் அறிவியல் துணை கொண்டு "AIDS" எனும் கொடும் நோய்க்கு ஆளாகியிருக்கும் "ஸ்டேசி"யை குணப்படுத்த முடிவெடுத்துள்ளேன். அவள் நிச்சயம் குணமடைந்து உங்களுக்கு நிறைய பேரக்குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பாள்.
எனக்கு 15 வயதுதானே ஆகிறது என்று கவலை கொள்ளவேண்டாம், நீங்கள் எவ்வாறு என்னைக் கவனித்துக் கொண்டீர்களோ, அதேபோல் "ஸ்டேசி" -யும் என்னைக் கவனித்துக் கொள்வாள்.
ஒரு நாள் உங்களை உங்களின் பேரக் குழந்தைகளுடன் நிச்சயம் நானும் ஸ்டேசியும் வந்து சந்திப்போம்.
இப்படிக்குத் தங்களை மிகவும் நேசிக்கும் உங்களின் அன்பு மகன்,
ஜோசுவா.
.
.
.
.
.
அப்பா!
ஒரு நிமிடம்.
மேலே எழுதியிருக்கும் எதுவும் உண்மையில்லை!. நான் தற்பொழுது ஜான்சனின் வீட்டில் தான் தங்கியுள்ளேன். வாழ்க்கையில் மேலே கூறப்பட்டது போல் எத்தனையோ மோசமான விஷயங்கள் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தவே அவ்வாறு எழுதினேன்.
இப்பொழுது உங்களின் நெஞ்சின் மீது கை வைத்து கூறுங்கள் கிச்சனின் டைனிங் டேபிளில் இருக்கும் எனது "Progress Report" இவையனத்தையும் விட மோசமானதா?